வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் தேர்வுகள் தொடக்கம் ப்ளஸ்-1, ப்ளஸ்-2
ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கப்படுமா?
ப்ளஸ்-டூ தேர்வுக்குத் தயாராகும் நேரத்தில் தேர்தலுக்கு தயராகும் பணிகளில் ஈடுபட
வேண்டி உள்ளதால் தேர்தல் பணிகளில் இருந்து ப்ளஸ்-1, ப்ளஸ்-2 ஆசிரியர்களுக்கு
விலக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால், 9, 10
மற்றும் ப்ளஸ்-1 வகுப்புகளுக்கான இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ப்ளஸ்-டூ தேர்வு மட்டும் மே 3ம் தேதி தொடங்க உள்ளது. கரோனா ஊரடங்கு
நேரத்தில் தனியார் பள்ளிகளில் மட்டுமே ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
மூலம் முறையாக வகுப்புகள் நடந்துள்ளன.
அவர்களுக்கான பாடங்களும் நடத்தப்பட்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு
வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ்-2 வகுப்பு
மாணவர்களுக்கு இன்னும் பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை.
இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் மிகவும் ஏழ்மை
நிலையில் இருப்பவர்கள். அவர்களில் பலருக்கு தந்தை, தாய் இல்லாமல் உறவினர்கள்
அரவணைப்பில் படிக்கின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் இவர்கள் கட்டிட வேலை உள்ளிட்ட தினக்கூலி வேலைகளுக்கு
சென்றுவிட்டனர்.
இந்த ஆண்டு பள்ளிகள் திறந்தபிறகுதான் ப்ளஸ்-2 பாடங்களை படிக்க ஆரம்பித்துள்ளனர்.
பாடங்களையும் தற்போதுதான் ஆசிரியர்கள் விரைவாக நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் மாதத்தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதி முறையாக
படித்தபோதே அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில்
மிகவும் சிரமப்பட்டனர்.
தற்போது எந்தத் தேர்வுகளையும் எழுதாமல் முறையாக பாடமும் நடத்தப்படாமல் முறையான
தயாரிப்பு இல்லாமல் எப்படி ப்ளஸ்-டூ தேர்வுகளை எழுதப்போகிறார்கள் என்ற கவலையில்
ஆசிரியர்கள் உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடப்பதாகவும், வாக்கு
எண்ணிக்கை மே 2ம் தேதி நடப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதனால், தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. இன்னும் ஒரு
சில நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி
வகுப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் வழக்கம்போல் ஈடுபடுத்தப்பட உள்ளது. ஆனால்,
ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்பு ஆசிரியர்கள், தற்போதுதான் ப்ளஸ்-2 வகுப்பு
மாணவர்களுக்கு முழுவீச்சில் பாடம் எடுத்து வருகிறோம். எங்களையும் தற்போது தேர்தல்
ஆணையத்தின் பயிற்சிக்கு அழைக்க பட்டியல் எடுத்துள்ளனர்.
ஏற்கெனவே, ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு தடையின்றி பாடம் நடத்தவும், கரோனா ஊரடங்கு
விடுமுறையை ஈடுகட்டவும் சனிக்கிழமையும் பள்ளிகள் நடக்கிறது.
தற்போது தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தால் ஆசிரியர்கள் ஒய்வே
இல்லாமல் தேர்வுகள் முடியும் வரை பணிபுரிய வேண்டிய இருக்கும்.
அதனால், அவர்கள் ப்ளஸ்-2 தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பணியில் கவனம்
சிதறவும், தோய்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே
2ம் தேதிக்கு மறுநாள் 3ம் தேதி ப்ளஸ்-2 தேர்வு நடக்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை சில தொகுதிகளில் நள்ளிரவு வரை நடக்கும். சில சமயம் மறுநாள் காலை
வரை கூட நடக்கும். அதுவரை வாக்கு எண்ணிக்க மையப்பணிகளுக்கு செல்லும் ப்ளஸ்-1,
ப்ளஸ்-2 ஆசிரியர்கள் அங்கு இருந்தாக வேண்டும்.
அதனால், தேர்தல் பணிகளில் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்பு ஆசிரியர்களுக்கு விதி விலக்கு
அளிக்க வேண்டும், ’’ என்றனர்.
0 Comments