9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை
மறுபரிசீலனை செய்ய வேண்டும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு
வலியுறுத்தல்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப
கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிபிஎஸ்இ ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்,
தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் விழா நடைபெற்றது.
விழாவின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி
பெற்றுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இது உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டியிடும் மனப்பான்மையை பாதிக்கும். எனவே
இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.
ஏற்கெனவே பள்ளிகள் நிதிச்சுமையால் தவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பால்
மாணவர்கள் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முன்வர
மாட்டார்கள்.
இதனால் பள்ளிகள் மேலும் பல பாதிப்புகளை சந்திக்கும். தனியார் பள்ளிகளின்
கோரிக்கைகளை பரிசீலிக்க ஆலோசனை குழுக்களை அமைத்து அதில் தனியார் பள்ளிகள்
சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்திலிருந்து
ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்.
பள்ளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர்
டி.சி.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments