தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு
மையங்களை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்களும், புதுச்சேரியில் ஒரு மையமும் மட்டுமே
இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள்
வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதக்கூடிய நிலைமை இருக்கிறது. இதற்கான
விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான இணைப்புகள் திறக்கப்பட்ட 3 மணி நேரங்களில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மையங்கள் நிரம்பின. எனவே கூடுதல் தேர்வு
மையங்களை அமைக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொதுநல வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது தேசிய தேர்வு
வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள்
விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால் மற்றவை என்று குறிப்பிட
வேண்டும் என்றும் அதை பரிசீலித்து மாநிலத்திற்குள் தேர்வு மையங்கள் தேவைப்பட்டால்
ஒதுக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் இந்த ஆண்டே கூடுதல் தேர்வு மையங்களை
அமைக்காவிட்டாலும் அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அவர்கள்
விண்ணப்பிக்கும் மாநிலத்திலேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் கூடுதல் மையங்களை
அடுத்தாண்டாவது உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து
வைத்துள்ளனர்.
0 Comments