ஆன்லைன் மூலம் கல்லூரி, பல்கலை தேர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த
ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
9 மாதங்களுக்கு பிறகு, ஜனவரி மாதம் தான் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9,
10 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து பொதுத் தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் அதிகமானதால், 10ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வுகளை
அரசு ரத்து செய்தது. ஆனால் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நடக்கும் என்று
தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப் பேரவையின் தேர்தலை அடுத்து வாக்கு எண்ணிக்கை மே
2ம் தேதி நடக்க இருப்பதால், மே 3ம் தேதி தொடங்க வேண்டிய பிளஸ் 2 தேர்வின்
மொழிப்பாடத் தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் கொரோனா தொற்று மேலும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனால்,
பிளஸ் 2 தேர்வையும் ஜூலை மாதம் நடத்தலாம் என்று கல்வியாளர்கள் கருத்து
தெரிவித்தனர்.
இருப்பினும் பாதுகாப்புடன் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை பள்ளிக்
கல்வித்துறை தொடங்கியது. 24ம் தேதியுடன் செய்முறைத் தேர்வுகள் முடிவடைய உள்ள
நிலையில், தற்போது பிளஸ் 2 தேர்வை தேதி குறிப்பிடாமல் அரசு ஒத்தி வைத்து
அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு நேற்று அதிரடியாக மீண்டும்
ஊரடங்கை அறிவித்துள்ளது. அதில் சிலவற்றுக்கு விதிவிலக்குகளை அறிவித்து
இருந்தாலும், பிளஸ் 2 தேர்வை நடத்துவதில் உள்ள சிரமம் கருதி ஒத்தி வைத்துள்ளது.
அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் பிளஸ்
2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி
நடத்தப்படும்.
கல்லூரி பல்கலைக் கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியில் வகுப்புகள்
நடத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் தேர்வுகள் இணைய வழியாக
மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள்,
இணைய வழியாக மட்டுமே பயிற்சி அளிக்க அனுமதிக்கப்படுகிறது.
கோடைகால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
0 Comments