நாளை முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டருக்கு தடையா - அதிர்ச்சி தகவல்

நாளை முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டருக்கு தடையா - அதிர்ச்சி தகவல்
Click here to Download
புதுடில்லி: இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021ன் கீழ் செயல்படாத காரணங்களால் நாளை (மே 25) முதல் டுவிட்டர், பேஸ்புக் சமூக வலைதளங்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ‛டூல்கிட்' விவகாரம் தொடர்பாக டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான செய்திகள் டிரெண்டானது.

பிரதமர் மோடி மற்றும் இந்தியாவின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில், 'டூல்கிட்' ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த ஆவணங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரிய புயலைக் கிளப்பிய நிலையில், காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக மறுத்தது. மேலும் தவறான தகவல்களை பரப்பும் பா.ஜ., தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது.

இதனையடுத்து, சம்பித் பத்ரா உள்ளிட்ட சில பா.ஜ., தலைவர்கள் வெளியிட்ட குறிப்பிட்ட பதிவுகளுக்கு மட்டும் "manipulated media", அதாவது சந்தேகத்திற்கிடமானது என முத்திரையுடன் டுவிட்டர் வகைப்படுத்தியது. விசாரணையில் இருக்கும்போதே, சந்தேகத்திற்கிடமானது என முத்திரையிட்டது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு டில்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பி 24 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க கெடு விதித்தது.

இதையடுத்து நேற்று (மே 24) டில்லி சிறப்பு போலீசார் இரு குழுக்களாக பிரிந்து ஹரியானாவின் குர்கான், டில்லி லாடோசாராய் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள டுவிட்டர் அலுவலகத்திற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனிஷ் மகேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதாகவும், இது ஆரம்பகட்ட விசாரணை தான் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு ஆதரவாக டுவிட்டர் நிறுவனம் செயல்படுவதாக பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில் அதற்கான கெடு மே 26-ம் தேதியுடன் (நாளை) முடிகிறது. தனிநபர் கணக்குகளைத் தன்னிச்சையாக முடக்குதல், வசவுகள், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் என இந்தியப் பயனர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தொடர் புகார்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரங்கள் எல்லாம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளன. டுவிட்டரை தடை செய்ய வேண்டும் எனவும், டில்லி போலீசை பாராட்டும் விதமாகவும் பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்கள், பொதுவான நிறுவனமாக இருக்காமல், ஒருசில கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது நியாயமில்லை என்றும், இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021இன் கீழ் செயல்படாத சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒருசிலர் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை தடை செய்தால், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல விஷயங்கள் மக்களை சென்றடைய தாமதமாகும். எனவே, தடை செய்யாமல், விதிகளை கடுமையாக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், BanTwitterInIndia, WelldoneDelhiPolice, Manipulated Media, Twitter and Facebook போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டானது.

Post a Comment

0 Comments