மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுதிக்கொள்ளலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

    பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.

    12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

     தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்புத் தேர்வில் 50%, +1 பொதுத்தேர்வில் 20%, +2 செய்முறைத் தேர்வில் 30% என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. +2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    வருகிற 22 ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுமதிப்பீடு செய்துகொள்ளலாம் அல்லது மறுதேர்வு எழுதிக்கொள்ளலாம். மதிப்பெண்களில் மாறுபாடு இருப்பதாக கருதும் மாணவர்கள், தலைமை ஆசிரியர் மூலமாக மறுமதிப்பீடுக்கான கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு நடத்தப்படும்போது மீண்டும் தேர்வு எழுதிக்கொள்ளலாம். வருகிற 22 ஆம் தேதிக்குள் இவற்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

     தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,16,473. இதில் 30,600 பேர் 550-600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை. மேலும், வகுப்புக்கு வராத 1,656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கணக்கீடு முறை என்பதாலும் உயர்படிப்புகளை கருத்தில்கொண்டும் தசம எண்களை முழுமையாக்காமல் வெளியிடப்பட்டுள்ளது.

     பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்து தேர்வு எழுதாத பிளஸ் 1 மாணவர்கள் 1,650 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கரோனா காலம் இல்லையென்றால் அவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்புண்டு என்ற அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்பட்டுள்ளனர்.

     தற்போது மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள், கடந்த ஆண்டு தேர்வு எழுத முடியாதவர்கள், 39,000 தனித்தேர்வர்கள் உள்ளிட்ட சுமார் 40,000 பேருக்கு கரோனா சூழலைப் பொருத்து வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றார்.


Post a Comment

0 Comments