கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்

   கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடு வருகிற 2ம் தேதி முதல் அமல் முழு விவரம்
    Click here to Download
    கோவை மாவட்டத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி

   கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் அத்தியாவசிய கடைகள் தவிா்த்து மற்ற கடைகளை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக பின்பற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கோவையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமுடக்கத்தில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7ஆவது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூா்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகா் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, துடியலூா் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

உணவகங்கள் காலை 8 முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மாா்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி. சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள-தமிழ்நாடு மாநில அனைத்து எல்லைகளிலும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடிகள் வழியாக கோவை மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆா்டிபிசிஆா் பரிசோதனைக்கான சான்று அல்லது கரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச் சாவடிகளிலேயே ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

எனவே பொது மக்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்து நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்த ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments