மாணவர்களுக்கு அசைன்மென்ட் பள்ளி கல்வித்துறை புதிய திட்டம்

 தமிழகத்தில், பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு, 'அசைன்மென்ட்' எனப்படும், செயல் திட்டங்களை வழங்கி, அவற்றை அவர்கள் செய்து முடிக்க, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சுற்றறிக்கை

     இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா காரணமாக, நீண்ட காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கற்றல், கற்பித்தல் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாணவர்களுக்கு அசைன்மென்ட்களை வழங்க அறிவுறுத்தி உள்ளது.

   அதன்படி, வகுப்பு வாரியாக, 'அசைன்மென்ட்ஸ்' பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.ஒன்றாம் வகுப்பு முதல், ௫ம் வகுப்பு மாணவர்களுக்கு, படைப்பாற்றலை அடிப்படையாக வைத்து, அசைன்மென்ட்ஸ் தயார் செய்யப்பட்டு உள்ளது.மாணவர்கள் சொந்தமாக, வாழ்த்து அட்டைகள் உருவாக்குதல், கலை வேலைப்பாடுகளை செய்தல், புதுமையான சொற்களை எழுதுதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

செயல் திட்டங்கள்

   மாதந்தோறும் ஒரு பாடத்திற்கு, குறைந்தது இரண்டு செயல் திட்டங்கள் அளிக்கப்படும். ஆறாம் வகுப்பு முதல், ௮ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களின் ஒருங்கிணைந்த திறன்களை பரிசோதிக்கும் வகையில், சிறிய பரிசோதனைகள், கட்டுரை, கடிதம் எழுதுதல், தொகுப்புகளை உருவாக்குதல், பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை இருக்கும்.

     ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடத்திட்டம் அடிப்படையில் செயல் திட்டங்கள் வழங்கப்படும். கட்டுரைகள் எழுதுதல், புத்தக விமர்சனம் எழுதுதல், சிறிய அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவையும் இருக்கும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மாதவாரியாக, பாட வாரியாக அசைன்மென்ட் தயாரித்து அனுப்பப்படும். அவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அடங்கிய, 'வாட்ஸ் ஆப்' குழுக்களை துவக்க வேண்டும்.

    அதேபோல், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தனி வாட்ஸ் ஆப் குரூப் துவக்கப்பட வேண்டும். அவற்றில், செயல் திட்டங்களை பகிர வேண்டும். சிரமமான பகுதிகள்தலைமை ஆசிரியர்கள், அதை பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பி, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

  மாணவர்கள், பாடப்புத்தகங்கள் உதவியுடன், தங்களது நோட்டில், அசைன்மென்ட்களை செய்து, ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சிரமமான பகுதிகள் எவை என்பதை கண்டறிய வேண்டும். அந்த பகுதிகளில், மாணவர்களுக்கு சரியான புரிதல் ஏற்படும் வகையில், கல்வி தொலைக்காட்சி வீடியோக்கள், விளக்க உரைகள் போன்றவற்றை, ஆசிரியர்கள் பகிர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments