நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

   நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிக் கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் தற்போது திறக்கப்பட உள்ளன.
இதற்காக ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் வகுப்பு அறைகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறியும் கருவியும் தயார் நிலையில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை விரிவாக அனுப்பி வைத்துள்ளன. அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பணிக்கு வரும் ஆசிரியர்களும், ஊழியர்களும் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அதன் தாக்கம் தமிழகத்திலும் வந்துவிடாமல் இருக்க அரசு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி, கோவை, தென்காசி, கம்பம், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய் பேரிடர் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தற்போதைய கொரோனா பரவல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் இந்த சூழலில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதால் மாணவ-மாணவிகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்காக கடைப்பிடிக் கப்படுமா? என்பது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ் வாறு கண்டறிவது என்பது பற்றியும் அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க என்னென்ன வசதிகள் செய்யப்படும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் அதன் அருகில் உள்ள ஆஸ்பத்திரி டாக்டர்களின் தொலைபேசி எண்கள் கட்டாயம் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சி, நகராட்சி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் தொலைபேசி எண்களும் பள்ளி, கல்லூரிகளில் வைத்திருக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இறுதியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments