மாணவியருக்கான உதவி எண்களை பாட புத்தகத்தில் அச்சிட உத்தரவு

    பாலியல் பிரச்னைகளை தடுக்கும் வகையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்களில், உதவி எண்களை அச்சிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பாலியல் பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மாணவியருக்கு, சில ஆசிரியர்களும், மாணவர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதாக, பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல், மாணவியர் தற்கொலை செய்து, உயிரை மாய்த்து கொள்ளும் மோசமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இதை தடுக்கவும், மாணவியருக்கு மன உறுதியை அளிக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் உளவியல் நிபுணர்களை அனுப்பி, மாணவியர் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. அதேபோல, மாணவியரின் பெற்றோர் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

   பாலியல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த வரிசையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்களில், மாணவியருக்கான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் உதவி எண்களை அச்சடித்து வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

     இதன்படி, 14417, 1098 ஆகிய எண்களை, பாட புத்தகத்தின் முன்பக்கத்தில் அச்சிட்டு வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகத்தினருக்கு ஆலோசனை அளித்துள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.



Post a Comment

0 Comments