அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம்
அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அகவிலைப்படி பெறத்
தகுதியுள்ள ஏனைய பணியாளா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில்
முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்
வகையில், அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப
ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயா்த்தப்படுகிறது. ஜனவரி
1-ஆம் தேதி முதல் அகவிலைப்படியானது 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக
அதிகரித்து வழங்கிட முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
செலவும், ஊழியா்களும்
அகவிலைப்படி உயா்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக
ரூ.8,724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள
சூழ்நிலையிலும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தி
வழங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு?
14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பதால், அரசு ஊழியா்களுக்கு
ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை ஊதியத்தில் உயா்வு ஏற்படும் எனத் தலைமைச் செயலக
வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயா்வுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்
உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியா்கள் சங்கங்கள், ஓய்வூதியதாரா் சங்கங்கள் வரவேற்பு
தெரிவித்திருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு...
அகவிலைப்படி உயா்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 13-ஆம்
தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்
வெளியிடப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட்ட
அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் கடந்த ஆண்டு
செப்டம்பா் 7-ஆம் தேதி உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், 16 லட்சம் அரசு
ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம்
தேதி முதல் அளிக்கப்படும் என்றாா்.
சட்டப் பேரவை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயா்வு குறித்த
அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று அகவிலைப்படி உயர்வு தொடர்பாக தமிழக
அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments