கோடை விடுமுறை முடிந்து, இன்று அனைத்து பள்ளிகளும்
திறக்கப்படுகின்றன. குதுாகலமாக கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரை வரவேற்க, அரசு
வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழகத்தில் முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு, மே, 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.நேற்றுடன்
விடுமுறை முடிந்தது. பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று அனைத்து
பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.கடந்த வாரம் திறக்கப்படவிருந்த, சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளும், அரசு அறிவிப்பை ஏற்று இன்று திறக்கப்படுகின்றன.
இன்று பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரை
வரவேற்க, பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு இலவச பாடப்
புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களை இன்றே வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த முதல் ஒரு வாரத்திற்கு, புத்துணர்வு
பயிற்சி, நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்த
அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௨0ம் தேதியும்; பிளஸ் 1
மாணவர்களுக்கு, 27ம் தேதியும் வகுப்புகள் துவங்க உள்ளன.
நிபந்தனைகள்
உடற்கல்வி ஆசிரியர்கள், வேலை நேரத்திற்கு, 30
நிமிடங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களின் வருகை, ஒழுக்கம்,
சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும் ஒவ்வொரு வகுப்புக்கும், வாரம் இரண்டு
பாடவேளைகள், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. இப்பாட வேளைகளில், மாணவர்கள்
அனைவரையும் விளையாட வைக்க வேண்டும் வாரத்தில் ஒரு நாள், பள்ளி நேரம்
முடிந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், கூட்டு உடற்பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய
வேண்டும் தினமும் காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும்.
இதில், மாணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும்.
மதிய உணவு இடைவேளை முடிந்த பின், 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் வழியாக,
மாணவர்கள் சிறுவர் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நுாலகத்தில் உள்ள நுால்கள்
போன்றவற்றை வாசிக்க செய்ய வேண்டும் வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப் பகிர்வு,
நீதிபோதனை பாட வேளை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று,
மாணவர்களின் மனநலன் சார்ந்து, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.இவ்வாறு, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments