பல லட்சங்கள் செலவு செய்து, தடபுடலான சாப்பாடு போட்டு, 'ஏசி'
அறையில் கூட்டங்கள் நடத்தியும், அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் எந்த
முன்னேற்றமும் இல்லை' என, பள்ளிக்கல்வி கமிஷனர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், இம்மாதம், 3, 4ம்
தேதிகளில், மதுரையில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், ஐந்து
மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள்
பங்கேற்றனர்.அப்போது, 'பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்' வாயிலாக, அரசு பள்ளி
செயல்பாடுகள் விளக்கப்பட்டன. அதை பார்த்தபின், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார்
பேசியதாவது:அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் செயல்படவில்லை; உபகரணங்கள் பயன்பாட்டின்றி
உள்ளன.'ஆய்வகங்களுக்கு, மாணவர்களை அழைத்து சென்று செய்முறை பயிற்சி அளியுங்கள்'
என, எத்தனை முறை கூறினாலும், இன்னும் நடப்பதில்லை. இதைத் தான் மாற்றாந்தாய்
மனப்பான்மை என்பர்.ஆய்வகத்தில் உள்ள ரசாயன உப்பு தீர்ந்து விடும்; பிப்பெட்,
பியூரெட் போன்ற உபகரணங்கள் உடைந்து விடும் என்று நினைக்கிறீர்களா; நிதி
தணிக்கையில் சிக்கி விடுவோம் என நினைக்கிறீர்களா; அவ்வாறு நடக்காது. பொருட்கள்
உடைந்தால் புதிதாக வாங்கி தருகிறோம். ஆனால், மாணவர்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க
கூடாது.ஒவ்வொரு முறையும், மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்திற்கு, பல லட்ச ரூபாய்
செலவு செய்கிறோம். அதிகாரிகள் எல்லாம் சென்னையில் இருந்து வருகிறோம்.
உங்களை அழைத்து, பல லட்சம் ரூபாய் செலவு செய்து, தடபுடலான
சாப்பாடு போட்டு, குளிரூட்டப்பட்ட அரங்கில் கூட்டம் நடத்தியும், மாணவர்களுக்கான
வசதி கிடைக்க வில்லையே; ஏன் மயான அமைதியாக இருக்கிறீர்கள்; எப்போது நம்மை பீடித்த
இந்த நோய் நீங்கும் என்பதை சொல்லுங்கள். 'கடை விரித்தேன்; கொள்வாரில்லை' என,
வள்ளலார் கூறினார். ஆனால், நாம் கடையையே விரிக்கவில்லை; பூட்டி
வைத்துள்ளோம்.ஆய்வகம், உபகரணங்கள் இருந்தும், அதை மாணவர்கள் பயன்படுத்த
கொடுக்காமல் இருப்பது குற்றம். அடுத்த முறை ஆய்வு கூட்டத்தில் இதுபோன்ற நிலை
இருக்க கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
'அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்' என முதல்வரும், அமைச்சர்களும்
கூறி வரும் நிலையில், அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள் கூட செயல்படவில்லை என்ற உண்மை
நிலையை, அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வி கமிஷனர் தோலுரித்து காட்டியுள்ளார்.
0 Comments