கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும்
பொருண்மைக்கான வழிமுறைகள் உருவாக்கம் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த அரசாணை
வெளியீடு.
சென்னை: கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும்
வழிமுறைகள் உருவாக்க, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து
வழங்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சர்
அறிவிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மை நலன்களை மேம்படுத்துவதை
நோக்கமாகவும், சிறுபான்மையினர் நலனுக்கு துணையாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க
வேண்டும்.
மேலும் இத்தகைய கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினரால்
நிறுவப்பட்டு சிறுபான்மை நிர்வாகிகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு வர வேண்டும்.
சிறுபான்மை சமூகத்தால் நிறுவப்படாத எந்த ஒரு கல்வி நிறுவனமும் இத்தகைய அந்தஸ்தை
அடைய முடியாது. சிறுபான்மையினரால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் சுயநிதி
கல்லூரிகளில் தொழில் முறை படிப்புகள் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம்
சிறுபான்மை மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க பட்டிருக்க வேண்டும். 50 சதவீதம்
இடங்களில் காலியிடங்கள் இருந்தால் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
மதம் அல்லது மொழி ரீதியில் ஒருவர் சிறுபான்மையினரா? இல்லையா? என்பதை அறிந்து
கொள்ள மாவட்ட அளவிலான எண்ணிக்கையை கணக்கில் எடுக்காமல் மாநில அளவிலான தரவுகளை
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெறப்படுகிற விண்ணப்பங்களை சரிபார்த்து பரிசளிக்க தலைமைச் செயலாளர்
தலைவராக கொண்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை,
சுகாதாரத்துறை, சட்டத்துறை, வேளாண் துறை செயலாளர்களை உறுப்பினர்களாக குழு அமைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் வரைமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் கலை அறிவியல் கல்லூரிகள், மருத்துவக்
கல்லூரிகள், சட்டம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளுக்கும்
சிறுபான்மை அந்தஸ்துக்கு வரும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெறும் அலுவலகமாக
சிறுபான்மை நல ஆணையரகம் செயல்படும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு 15 நாட்களுக்குள்
முதல் கட்ட சரிபார்ப்பை முடித்து விட்டு துறை ரீதியிலான அடுத்த கட்ட பரிசீலனைக்கு
அனுப்ப வேண்டும்.
மேலும் சிறுபான்மை அந்தஸ்து அளிப்பது சம்பந்தமான அனைத்து
நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையாக இருப்பதை உறுதி செய்வதற்காக பிரத்யேக
இணையதளம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நிலையிலும் சரிபார்க்கப்பட்டு துறை
ரீதியிலான பரிசீலனைக்கு பிறகு அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு முன்பு இறுதி
முடிவிற்காக வைக்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டு
இருக்கக்கூடிய குழு ஒன்று கூடி வைக்கப்பட்டிருக்கிற பரிசீலிக்கப்பட்ட
விண்ணப்பங்கள் குறித்த முடிவு எடுக்க வேண்டும். குழுவின் அனுமதி பெறப்பட்டவுடன்
சிறுபான்மை நல ஆணையர் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழை
வழங்கலாம். இந்தப் பணிகளுக்காக சிறுபான்மை நல ஆணையரகத்திலும் பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அலுவலகத்திலும் தேவைக்கேற்ப ஊழியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு
அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments