அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள்
ரத்து இல்லை
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளை ரத்து
செய்யும் திட்டம் இல்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல்
ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக
கல்விபடிப்புகளுக்கான மையத்தின் இயக்குநர் ஹோசிமின் திலகர் கடந்த 20-ம் தேதி
வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர்,
பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய
பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டிடவியல் மற்றும்இயந்திரவியல் தமிழ் வழி
பொறியியல் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தூத்துக்குடி,
ராமநாதபுரத்தில் இந்திரவியல் பிரிவில் ஆங்கில வழியும், அரியலூரில் கட்டிடவியல்
பிரிவில் ஆங்கில வழியும், பட்டுக்கோட்டை, திருக்குவளையில் இயந்திரவியல்,
மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) ஆகிய பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து
செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நேற்று, ‘நான்
முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் இதுதொடர்பாக
கேட்டபோது, “தமிழ் வழி பாடப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை. தமிழ்
வழியை அதிகப்படுத்தும் எண்ணம் மட்டுமே உள்ளது” என தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “தற்போது
அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவில் தமிழ் வழியில் பயில யாரும் முன்
வரவில்லை. ஆனாலும், ஒரே ஒரு மாணவர் தமிழ் வழியில் பயில விருப்பம் தெரிவித்தாலும்
தமிழ் வழி கல்வி தொடரும்” என்றனர்.
0 Comments