பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு - ரேண்டம் எண் வெளியீடு
இளநிலை பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்குரிய ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி
வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள்
ஆண்டுதோறும் பொதுகலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான
பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில்
ஜூலையில் நடைபெற உள்ளது.
இதற்காக இணையதளத்தில் ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களை முழுமையாக
பதிவேற்றியுள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற ஜூன் 9 வரை அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்),
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இந்த
எண்,கலந்தாய்வின்போது மாணவர்களின் கட்ஆஃப் மதிப்பெண் சமமாக இருந்ததால்
சேர்க்கையில் முன்னுரிமை அளிப்பதற்கு பயன்படும்.
அதாவது, கலந்தாய்வில் மாணவர்கள் கட்ஆஃப் மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால்
முதலில் கணித மதிப்பெண்ணும், 2-வதாக இயற்பியல் மதிப்பெண்ணும், 3-வதாக விருப்பப்
பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும். இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும்
சமமாக இருப்பின், பிளஸ் 2 மொத்த மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
அதுவும் சமமாக இருந்தால் 10-ம் வகுப்பு மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அவையும்
சமமாக இருப்பின் பிறந்த தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இவை அனைத்தும்
சமமாக இருந்தால் மட்டுமே இறுதியில் இந்த ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும்.
இதனிடையே, மாணவர்கள் சமர்ப்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை, துறை சார்ந்த
அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தவறுகள், சந்தேகங்கள்
இருப்பின் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விளக்கம்
கோரப்படும். மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நிலையை www.tneaonline.org என்ற
இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஜூலை 2 முதல் கலந்தாய்வு: இந்த பணிகள் ஜூன் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ல் வெளியிடப்படும். அதன்பின் கலந்தாய்வு
ஜூலை 2-ல் தொடங்கி நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்
தெரிவித்துள்ளது.
0 Comments