காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு அக்டோபர் 3ல் பள்ளிகள் திறப்பு

  காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு அக்டோபர் 3ல் பள்ளிகள் திறப்பு.
Click here to Download
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை எப்போது விடப்படும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷயமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைகின்றன. உடனே காலாண்டு விடுமுறை தொடங்கி விடுகிறது. அதாவது, செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை தான். அதாவது 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி என்பதால் அரசு விடுமுறையாக அமைந்து விடுகிறது.

29ஆம் தேதி ஒரே ஒரு நாள் தான் தேர்வு விடுமுறை எனக் கூறும் வகையில் அமைந்துள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை. இதையடுத்து செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகியவை சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களாக வந்துவிடுகிறது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து அக்டோபர் 3 செவ்வாய் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

குறைந்தது 10 நாட்களாவது காலாண்டு விடுமுறை கிடைக்கும் என மாணவ, மாணவிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதில் பாதி மட்டுமே விடுமுறையாக கிடைத்திருக்கிறது. இதன்மூலம் செப்டம்பர் 2023ல் அரசு பள்ளிகளின் வேலை நாட்கள் என்பது 18ஆக அமைந்துள்ளது. இதுதவிர செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 16ஆம் வரையிலான காலகட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 7 - 29 வரை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு குழு சார்ந்த பயிற்சியும், செப்டம்பர் 7 - 9 வரை பள்ளி துணை ஆய்வாளர்களுக்கு மன்ற செயல்பாடுகள் தொடர்பான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 11 - 16 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியில் துறை பயிற்சி வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 11 - 15 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட BRTE மற்றும் DIET விரிவுரையாளர்களுக்கு புத்தாக்கம் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. செப்டம்பர் 19 - 20 ஆகிய நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9, 10ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி நடக்கிறது.

செப்டம்பர் 25 - 27 வரை 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அக்டோபர் 3 - 9 காலகட்டத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments