பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை நீக்கியதற்கு தடை
பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, நாகையை சேர்ந்த ஆசிரியையை நீக்க, பள்ளிக்
கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த வி.கே.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனு:
அரசு உதவி பெறும் சுந்தரம் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக, 2003 ஏப்.,
29ல் நியமிக்கப்பட்டேன். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, 2003 ஏப்., 1ல்
அரசு அறிவித்தது. ஆனால், அந்த ஆண்டு ஆக.,6ல் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
நான் பணியில் சேரும் போது, பழைய ஓய்வூதிய திட்டம் தான் அமலில் இருந்தது. அதில்
என் பெயர் சேர்க்கப்பட்டு, அதற்கான எண்ணும் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை
கமிஷனர், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, என் பெயரை நீக்கவும், எனக்கு
வழங்கிய எண்ணை ரத்து செய்யவும் ஆகஸ்ட், 28ல் உத்தரவிட்டார்.
இது, சட்ட விரோதமானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, 2003 ஆக., 6ல்
பிறப்பித்த அரசாணைபடி, என் பெயரை நீக்கி, பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய
வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்
வழக்கறிஞர் காசிநாத பாரதி ஆஜராகி, 'ரயில்வே ஊழியர் வழக்கில், முன்தேதியிட்டு பழைய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது என, உச்ச நீதிமன்றமும், ஆசிரியை
வள்ளிப்பாவை தொடர்ந்த வழக்கில், ஜூலை 11ல், இந்த நீதிமன்றமும் தீர்ப்பு
அளித்துள்ளன.
இதற்கு எதிராக பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் செயல்பட்டு, பழைய ஓய்வூதிய
திட்டத்தில் உள்ள மனுதாரரின் பெயரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, 'மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் உள்ளது. எனவே, பள்ளிக்
கல்வித்துறை கமிஷனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்றார்.
மேலும் ஜன., 24க்கு வழக்கை தள்ளிவைத்து, மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறை கமிஷனர்
உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
0 Comments