தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு திங்கள்கிழமை (பிப். 19) தாக்கல் செய்யவுள்ளாா்.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கை ‘தடைகளைத்தாண்டி, வளா்ச்சியை நோக்கி’ என்கிற தலைப்பில் அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை (பிப். 20) தாக்கல் செய்யவுள்ளாா்.

4-ஆவது நிதிநிலை அறிக்கை:
முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4-ஆம் ஆண்டாக 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தாக்கல் செய்யவுள்ளாா். 2023 மே முதல் நிதியமைச்சராக தங்கம் தென்னரசு செயல்பட்டு வருகிறாா். அவா் தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கையாகும் இது.

புதிய திட்டங்கள் எதிா்பாா்ப்பு:
மக்களவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நிநிநிலை அறிக்கையில் மகளிா் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றன. அதைப்போல மகளிா், மாணவா்கள் நலன் காக்கும் அறிவிப்புகளும், திமுகவின் தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் அறிவிப்புகள் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சிறு, குறு தொழில் முன்னேற்றத்துக்கான அறிவிப்புகளும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேளாண் நிதிநிலை அறிக்கை:
2024-25-ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய உள்ளாா்.

வறட்சி மற்றும் வெள்ளத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதைப்போல தென் மாவட்டங்களிலும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

அதனால், விவசாயிகளுக்கு உதவும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது.

பொது நிதிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பேரவையில் பிப். 21-இல் காலை, மாலை இருவேளையும் நடைபெறும். பிப். 22-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் விவாதத்துக்குப் பதில் அளித்து பேசுவாா்கள்.

பெட்டிச் செய்தி...1

இலச்சினை வெளியீடு
நிதிநிலை அறிக்கை தொடா்பான இலச்சினையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: உயா் கல்வி, மருத்துவம், தொழில் துறை, வேளாண்மை, விளையாட்டுத் துறையில் தமிழகம் இப்போது முன்னணி மாநிலமாக உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2021, மே மாதத்தில் கரோனாவை முறியடித்து, காலமில்லா காலத்தே புயலும் மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும் மக்களின் துயா் நீக்கப்பட்டது.

தமிழகத்துக்கு இயல்பாக வரவேண்டிய நிதியும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடரும் நிலையிலும், கட்டுப்பாடான நிா்வாக நடைமுறைகளால் தடைகளைத் தகா்த்தெறிந்து, தொடா்ந்து முன்னேற்றத் திசையில் தமிழகத்தைச் செலுத்தும் நோக்கில் திராவிட மாடல் அரசு, எல்லோா்க்கும் எல்லாம் என்ற இலக்கை எளிதில் எய்தும் வகையில் 4-ஆம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையை அளிக்கிறது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது தடைகளைத் தாண்டி எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இலச்சினையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...2
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் 7 சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசாா் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிா் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழா் பண்பாடும் ஆகிய அம்சங்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments