புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்
அமல்: ஏப்.1 பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அடுத்த
கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாவதால், மார்ச் 25-ல் அரசுப் பள்ளி
மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி அடுத்த கல்வியாண்டு
புதுச்சேரி, காரைக்காலில் தொடங்குகிறது.
புதுச்சேரியில் மொத்தம் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. புதுவைக்கு தனி கல்வி
வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும்,
ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும்
பின்பற்றப்பட்டு வருகிறது. 2011-ல் என்.ஆர்.காங்., அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை
அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014 - 15ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில்
ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ., பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ., பாடத் திட்டம்
அமல்படுத்தப்பட்டு வந்தது. அது காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்து. இவ்வாறு கடந்த
2018 - 19 கல்வி ஆண்டில் 5ம் வகுப்புக்கும் சிபிஎஸ்இ., பாடத் திட்டம்
அமல்படுத்தப்பட்டது. 6ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ., பாடத் திட்டம்
விரிவாக்கப்படவில்லை. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு
ஆட்சியமைத்தது. புதியக் கல்விக் கொள்கையை அமலாக்கவே சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை
அமலாக்குவதாக தெரிவித்தனர்.
அதனையொட்டி, இந்த கல்வியாண்டில் 1 முதல் 9, மற்றும் 11-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ
அமலானது. 10, 12ம் வகுப்புகள் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்
திட்டத்தில் இருந்தன. புதுச்சேரியில் 127 அரசுப் பள்ளி சிபிஎஸ்இ பாடத்
திட்டத்துக்கு மாறின. அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை முற்றிலும்
சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாறவுள்ளன.
அடுத்தக் கல்வியாண்டு செயல்பாடு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
பிரியதர்ஷினி கூறுகையில், “புதுவையில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும்
சிபிஎஸ்இ பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்நிலையில், 2023 - 24 ம்
கல்வியாண்டு முதல் அனைத்து அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம்
வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மற்றும் 11-ம் வகுப்பிலும் தமிழ்நாடு பாடத்
திட்டத்தில் இருந்து மாற்றப்பட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் மட்டும் தமிழ்நாடு பாடத் திட்டம்
பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டான 2024 - 25 முதல், 1 முதல் 12ம்
வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டம்
நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டியும், அரசாணையும்
கல்வியமைச்சர் நமச்சிவாயம் முன்னரே வெளியிடப்பட்டுள்ளார். இந்நிலையில், வரும்
கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகள் ஏப்ரல் 1ம்
தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31, 2025 வரை நடைபெறும்.
மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ம் தேதி வரையிலும் மற்றும் மே 1 முதல் 31ம் தேதி
வரையிலும் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 3ம் தேதி முதல் பள்ளிகள் தொடர்ந்தது
நடைபெறும். 2024 - 25 ம் ஆண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் 25,
2024-ல் இருந்து நடைபெற உள்ளது.” என்று குறிப்பிட்டார்.
0 Comments