பிரதமர் மோடி பேரணியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் - தலைமை ஆசிரியர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

   பிரதமர் மோடி பேரணியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் - தலைமை ஆசிரியர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
பிரதமர் மோடி பங்கேற்ற சாலை பேரணியில் மாணவர்களைப் பங்கேற்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த ஆண்டில் ஆறாவது முறையாக நேற்று (மார்ச் 18) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.

பிரதமர் மோடியின் சாலை பேரணி
அங்கிருந்து பிரதமர் மோடியின் ரோடு ஷோ எனப்படும் வாகன அணிவகுப்பு பேரணி தொடங்கியது. சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். திறந்த வாகனத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர்உடன் பிரதமர் மோடி வந்து, பொதுமக்களைச் சந்தித்தார்.

பேரணியில் பள்ளி மாணவர்கள்
அப்போது ராமர், சீதை மற்றும் அனுமன் ஆகியோரின் வேடமிட்டு, குழந்தைகள் பலர் பேரணியில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். அத்தோடு அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பள்ளி சீருடை அணிந்தும் பல்வேறு குழந்தைகள் பேரணிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இது அங்கிருந்தோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.

தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களைப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. இதனை மீறிய பாஜகவிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் மோடி பங்கேற்ற சாலை பேரணியில் மாணவர்களைப் பங்கேற்க வைத்த பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments