IFHRMS எனும் மனித ஆக்க மென்பொருள் பேரிடரிலிருந்து காப்பாற்றப்படுவார்களா ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்

   IFHRMS எனும் மனித ஆக்க மென்பொருள் பேரிடரிலிருந்து காப்பாற்றப்படுவார்களா ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்?
தொன்றுதொட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய வருமான வரியை ஒவ்வோர் ஆண்டும் உரிய ஆவணங்களோடு முறையாக செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு IFHRMS என்ற மென்பொருள் மூலமாக சம்பளப் பட்டியல்கள் பெறப்பட்டு மாதாந்திர சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

IFHRMS (Integrated Financial And Human Resource Management System) என்பது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களின் ஊதியத்தைப்(IFHRMS Salary Bill) பற்றியதாகும். மேலும், IFHRMS என்பதன் முழு விரிவாக்கம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இஃது ஒரு பாதுகாப்பான இணையதள வசதி கொண்ட கணினி அமைப்பாகும். எப்படி என்றால் இதனை கணினி வழியாக IP முகவரியைப் பயன்படுத்தி மட்டுமே அந்தந்த அலுவலகத்தில் பயன்படுத்த முடியும். வேறு யாராலும் பயன்படுத்த முடியாது. தற்போது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் களஞ்சியம் (Kalanjiam) என்னும் பெயரில் செயலியாகவும் இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது அறியத்தக்கது.

இதன் புதிய நடைமுறையாக நடப்பு நிதியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வருமானவரிப் பிடித்தமானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக கணக்கிட்டு பிடித்தம் செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசு 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானவரி செலுத்துவதில் பழைய நடைமுறை / புதிய நடைமுறை (Old Regime / New Regime) என இருவேறு வழியில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். இதில் பழைய முறையைத் தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு தாமாக புதிய முறை என்ற அடிப்படையில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் வருமானவரி விதிகளின்படி ஒவ்வொரு காலாண்டிற்கும் மட்டுமே வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source) TDS தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏப்ரல் 2024 முதல் இனி ஒவ்வொரு மாதமும் கட்டாயம் வருமானவரிப் பிடித்தம் செய்யக் கட்டாயப்படுத்துவதுடன் அவர்களின் அனுமதியின்றிக் கூடுதலான தொகையினை வருமானவரிப் பிடித்தம் செய்வது உரிய, உகந்த நடைமுறை ஆகாது.

தமிழக அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் தாமதம் செய்து வரும் இச்சூழ்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடமிருந்து கட்டாயப் பிடித்தம் செய்து ஒன்றிய அரசுக்கு வருமானவரி நிதியினை வழங்க அதிகாரிகள் முயற்சி எடுப்பது என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது. 2014 இலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக தனிநபர் வருமானவரி உச்ச வரம்பினையும் வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர சேமிப்பின் அளவையும் உயர்த்தாமல் ஒன்றிய அரசு தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆசிரியரும் அரசு ஊழியரும் சற்றேறக்குறைய இரண்டு மாத ஊதியத் தொகையை வருமான வரியாக ஆண்டுதோறும் செலுத்தி வருகின்றார்கள்.

இதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல், தமிழ்நாடு அரசின் நிதித்துறை நடந்து கொள்வது வியப்பையும் வலியையும் உண்டுபண்ணுகிறது. இதுகுறித்து, ஊழியர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத நிலையில், அவர்களது விருப்பத்தின்படி மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்து கொள்வதைத் தவிர்த்து இவ்வளவுதான் பிடித்தம் செய்ய வேண்டும், மென்பொருள் சொல்வதைத் தான் நீங்கள் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதென்பது நல்ல நடைமுறை அல்ல. ஊழியர்களின் வசதிக்காகத்தான் மென்பொருளே தவிர, மென்பொருளின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்துவது என்பது ஏற்பதற்கில்லை. இது சற்றும் பொருத்தப்பாடு இல்லாத ஊழியர் விரோத நடவடிக்கையாகும்

ஒன்றிய அரசு வழங்கியுள்ள அதாவது நிறுத்த உத்தேசித்துள்ள பழைய நடைமுறையில் வருமானவரி செலுத்துபவர்கள் தங்களுக்குரிய சேமிப்புகளை உரிய விவரங்களுடன் உள்ளிடும் முறை குறித்தும் அவற்றை எவ்வாறு உள்ளீடு செய்யப்பட வேண்டும் என்கிற விவரங்கள் குறித்தும் கருவூலத்துறை மூலமாக ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் முறையாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது நினைவுகூறத்தக்கது. இது ஊழியர்கள் மீதான நிதித்துறையின் அலட்சியப்போக்கையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

இந்த ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் கட்டாய மாதாந்திர வருமானவரி பிடித்தமானது ஒரு சம மாதாந்திர தவணை (Equated Monthly Instalment) அளவிற்கு பிடித்தம் செய்யப்படும் என்பதால் ஊழியர்கள் தங்களுடைய மாதாந்திர குடும்ப செலவுகள், மருத்துவச் செலவுகள், வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர EMI செலவுகள், குழந்தைகளுக்கான கல்விக் கட்டண செலவுகள் ஆகியவற்றைத் திட்டமிட்டு வைத்துள்ளவாறு தொடர்ந்து மேற்கொள்ள முடியாதப் பேரிடர் சூழல் உருவாகியுள்ளது

ஏற்கனவே, ஊதிய இழப்பு, சலுகைகள் பறிப்பு, ஓய்வூதியம் ஒழிப்பு, காலிப்பணியிடத்திற்கும் சேர்த்து செய்யும் இரட்டிப்பு உழைப்பு, கசக்கிப் பிழியும் பணிச்சுமையால் தொடர்ந்து மன அழுத்தத்தில் ஆட்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இது மேலும் புதியதொரு மன உளைச்சலை அளிப்பதாக உள்ளது.

ஆகவே, பணியாளர் நடைமுறைக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத இந்த புதிய நடைமுறையைக் கைவிட்டு ஒவ்வோர் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் தம்முடைய சொந்த விருப்பத்தின் பேரில் தமது வருமான வரியை கடந்த காலங்களில் இருந்து வந்தது போல் நிதியாண்டின் இறுதியில் கணக்கிட்டு வரி செலுத்தும் பழைய முறை தொடர வேண்டும்.

அவ்வாறு செய்ய இயலாத நிலையில், ஏற்கனவே விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு தாமாகவே புதிய நடைமுறையில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. பல்வேறு காரணங்களால் உரிய வகையில் விருப்பம் தெரிவிக்க இயலாமல் போனவர்களுக்கு மீண்டும் விருப்பம் தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம்.

பழைய நடைமுறையைத் தேர்வு செய்தவர்கள் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் அவரவர் தனிப்பட்ட பயனர் உள்நுழைவு (Individual Login) இல் சென்று வீட்டு வாடகை, வீட்டுக்கடன், காப்பீட்டுத் தொகை, இதர சேமிப்பு உள்ளிட்ட விவரங்களை வருமானவரி சுய உறுதிமொழி (Income Tax Self Declaration) என்ற பகுதியில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் பலருக்கும் முறையாகத் தெரிவிக்கப்படாத காரணத்தால் இவர்களில் பெரும்பாலானோர் அவ்வாறு பதிவு செய்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

எனவே, இதனால் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகப்படியான வருமான வரி அவரவர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக பலரும் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் முறையிட்டு வருவது எண்ணத்தக்கது. அதாவது இதுவரை வருமான வரியே செலுத்தாதவர்களுக்கும் விலக்குப் பெற்றவர்களுக்கும் கூட இந்த குளறுபடி காரணமாக வருமான வரி பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது.

தமக்கோ, குடும்பத்தினருக்கோ உயிர் காக்கும் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் பாதிப்புக்கு உள்ளானோர், நோயாளிகளான பெற்றோரைப் பராமரிப்பு செய்வோர், மாற்றுத்திறனாளிகளான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தனிநபர் வருமானவரிச் சலுகைகள் இந்த தாமாக இணைய வழியில் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையில் கணக்கிடவும் கருத்தில் கொள்ளப்படவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கூடுதலாகப் பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர வருமானவரி தொகையினை மீண்டும் வருமானவரித்துறையிடம் மீளப் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அடிப்படை அன்றாட வாழ்வாதாரத்துக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தின் ஒரு பெரும் பகுதியினைத் தவறாகக் கணக்கீடு செய்யப்பட்ட வருமான வரித்துறையிடம் செலுத்தி விட்டு அதைத் திரும்பப் பெறுவதற்காக நெடுநாள்கள் காத்திருக்க வேண்டும் என்பது பாதிக்கப்படுவோர் எதிர்நோக்கும் ஆகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

இந்த புதிய மென்பொருள் தாமாகக் கணக்கீடு செய்து பிடித்தம் செய்திடும் பல்வேறு முரண்பாடுகள் நிறைந்த ஊதியம் வழங்கும் முறையைக் கைவிட வேண்டியது அவசர அவசியமாகும். அதேவேளையில், இந்த மாதம் கூடுதலாக, தவறான முறையில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி பிடித்தத்தை நீக்கம் செய்து எதிர்வரும் மாதங்களில் முறையாகத் தகவல் அளித்தும் தக்க வழிகாட்டியும் அதன் அடிப்படையில் பிடித்தம் செய்ய நிதித்துறை அலுவலர்களுக்கும் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

இத்தகைய மிகையான வருமானவரி பிடித்தம் காரணமாகக் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடிக்குப் பணியாளர்கள் ஆட்படுவது உறுதி. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் பெறும் ஊதியத்தில் பல்வேறு பெரும் கடன்கள் மற்றும் சிறு முதலீடுகள் சார்ந்து ஏற்கனவே கொண்டிருக்கும் திட்டமிடுதலில் இந்த எதிர்பாராத கூடுதல் செலவினமானது அவர்களது குரல்வளையை நெரிக்கக் கூடும். மேலும், இவர்களைப் பொறுத்தவரையில், தங்களது ஊதியத்திற்கு ஏற்ற வருமான வரியினை ஆண்டுதோறும் முன்கூட்டியே அதாவது பிப்ரவரி மாதத்திலேயே முறையாக, முழுமையாகச் செலுத்தக்கூடியவர்கள் என்பது அனைவரும் அறியத் தக்கது.

வேறுவழியில்லாமல் இதைக் கடைப்பிடித்தாக வேண்டிய இக்கட்டான சூழலில், கடந்த நிதியாண்டில் பணியாளர் செலுத்திய வருமானவரித் தொகையினை அடிப்படையாகக் கொண்டு, அத்தொகையினை சம மாதாந்திர தவணைகளாகப் பகுத்து, அதனை வருமான வரி பிடித்தமாகக் கொள்வது என்பது ஓரளவிற்கு சரியான நடவடிக்கையாகும்.

மேலும், தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஊழியர் விருப்பத்திற்கிணங்க ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் மாதாந்திர வருமானவரி தவணைகளையே தொடர்வது தான் நல்லது. கூடுதலாகப் பிடித்தம் செய்ய நினைப்பவர்கள் தம் விருப்பப்படி முன் வருமானவரித் தொகையைச் செலுத்த அனுமதிப்பது என்பது உகந்தது.

அதைவிடுத்து, மாத ஊதியத்தை மட்டுமே முழுதாக மலைபோல் நம்பி வாழும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை வாட்டி வதைப்பது என்பது சரியல்ல. அவ்வப்போது நிகழும் பண்டிகைகள் சார்ந்த செலவுகள், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சார்ந்த சுக, துக்க நிகழ்வுகள் சார்ந்த திடீர் செலவினங்கள், எதிர்பாரா மருத்துவ சிகிச்சை செலவுகள் மற்றும் கல்விச் செலவினங்கள் ஆகியவற்றுடன் உழன்று கொண்டிருப்போரின் அடிமடியில் கைவைப்பதாக இந்த கட்டாய முன் வருமானவரி பிடித்தம் உள்ளது.

ஏற்கனவே, 2014 வரை 12 மாதத்தில் 1 மாத ஊதியத்தை வருமான வரியாகச் செலுத்தி வந்த நிலையில், 2023 முதல் மொத்தமுள்ள 365 நாள்களில் 60 நாள்கள் உழைப்பைக் கொட்டிப் பெறப்படும் மாத ஊதியம் முழுவதையும் அப்படியே நாட்டின் நலன் கருதித் தாரை வார்த்து தனிநபர் வருமான வரியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் பெரும்பாலோனோர் இருக்கின்றனர்.

இத்தகு சூழலில், 2024 இல் ஒவ்வோர் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கழுத்தில் IFHRMS எனும் மென்பொருள் கத்தி வைத்து வருமான வரியாக வழிப்பறி செய்வதென்பது மனிதத்தன்மையற்ற நடவடிக்கை என்பது பாதிக்கப்படும் பலரின் கருத்தாகும். ஆனாலும் ஆட்சியாளர்கள் மீது இன்னமும் ஒற்றை வருமானம் கொண்ட, பல்வேறு நெருக்கடிகளைச் சமாளித்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் கணவரால் கைவிடப்பட்ட, கைம்பெண் நிலையில் உள்ள, மாத ஊதியத்தைத் தவிர எந்தவொரு முன் பணமும் பெற வாய்ப்பில்லாத புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தள்ளப்பட்ட ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இந்த மனித ஆக்க மென்பொருள் பேரிடரிலிருந்து விட்டு விடுதலையாகி எப்படியாயினும் தப்பிக்க நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். விலகிடுமா இந்த மூடுபனி?

எழுத்தாளர் மணி கணேசன்

Post a Comment

0 Comments