20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி - தமிழ்நாடு அரசின்
செய்தி வெளியீடு!
20,332 அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி
“மாணவர்களின் கற்றலை எளிமையாக்கும் பொருட்டு மாநிலம் முழுவதும் 20,332 அரசுப்
பள்ளிகளில் அதிவேக இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 17,221 அரசு
பள்ளிகளில் ஜுன் 2-வது வாரத்துக்குள் இப்பணி முடிவடைந்துவிடும்” என்றும் தமிழக
அரசு பெருமிதத்துடன் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
"வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் அரசுப் பள்ளி
மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக
முக்கியமானது. இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழக அரசு
தற்போது தொழில்நுட்ப விரிவாக்க நிகழ்வை ஒரு முன்னெடுப்பு நடவடிக்கையாக மேற்கொண்டு
வருகிறது.
அந்த வகையில், புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் வாயிலாக நடைபெற்ற கற்றல்
கற்பித்தல் நிகழ்வின் ஓர் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற
பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப் பொருள்களை எளிதாகப் புரிந்து
கொள்ளவும், பெற்ற தகவல்களை தக்கவைத்துக் கொள்ளவும் மற்றும் அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர் களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை
உருவாக்கவும் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களும்,
22,931 திறன்மிகு வகுப்பறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் 46 லட்சத்து 12 ஆயிரத்து 742 மாணவ மாணவியர் பயனடைவர். மேலும், 6,023
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப
ஆய்வகங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப்
பொருள்கள் அனைத்தும் காணொலி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில்
வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களுக்கான உயர்கல்வி
வழிகாட்டுதல்கள், மொழி ஆய்வகச் செயல்பாடுகள், மனவெழுச்சி நலன் மேம்பாட்டுப்
பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான மதிப்பீடுகள் போன்றவை உயர்தொழில்நுட்ப
ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
Press Release - Click here to Download
0 Comments