பொறியியல் படிப்பு - தமிழகத்தில் நடப்பு ஆண்டு 60,000 இடங்கள் காலியாக வாய்ப்பு

   பொறியியல் படிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு 60,000 இடங்கள் காலியாக வாய்ப்பு
தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 433 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.93 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத்திறனாளி உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 836 இடங்கள் நிரம்பின. இதையடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்றுகள் முடிவில் 64,020 இடங்கள் நிரம்பியுள்ளன.

இதைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் (ஆக.28) நிறைவு பெற்றது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 14,149 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 82,693 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 3,769 அரசுப் பள்ளிள் மாணவர்கள் உட்பட 51,920 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை /www.tneaonline.org/ எனும் வலைதளத்தில் அறியலாம்.

இதற்கிடையே, சிறப்புப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 23,031 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 70,403 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேநேரம் கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 1 லட்சத்து 16,620 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு சேர்க்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

துணைக் கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் /www.tneaonline.org/ எனும் வலைதளம் வழியாக செப்டம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின்னர் எஸ்சிஏ காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதியில் நடைபெறும். இவற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடப்பு ஆண்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் சுமார் 60,000 இடங்கள் வரை காலியாகக் கூடும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments