அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் - அமைச்சர் அன்பில்
மகேஸ்
சென்னையில் அரசுப் பள்ளிக் கூடத்தில் ஆன்மிகப் பேச்சாளர் ஒருவர் தன்னம்பிக்கை உரை
என்ற பெயரில் நிகழ்த்திய சொற்பொழிவு சர்ச்சையான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசுப் பள்ளி ஒன்றில் பிரபல ஆன்மிகப்
பேச்சாளர் ஒருவர் மாணவிகள் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவும், அதன் நிமித்தமாக
அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் அந்தப் பேச்சாளர் மேடையில் இருந்தபடியே
வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி
சர்ச்சையானது.
இந்நிலையில் இன்று (செப்.6) காலை சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்
சங்கத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள
வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை
சந்தித்தார்.
அப்போது அவர், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில்
சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக
இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில்
அந்த நடவடிக்கை அமையும்.” என்றார்.
பின்னர் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “பள்ளி மாணவர்கள்
சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கிவிடக் கூடாது.
அறிவை செலுத்தி சிந்திக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
மாணவர்கள் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே
புத்திசாலித்தனம் அல்ல; நல்லது, கெட்டது எது என அறிந்து கொள்ளும் பகுத்தறிவு
வேண்டும். ” என்று அறிவுரை கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “பள்ளிக்குள் யாரை சிறப்பு விருந்தினராக அனுமதிப்பது
என்பதில் பள்ளியில் ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று
எச்சரித்தார். ஆன்மிக சொற்பொழிவாளரின் பிற்போக்கு சிந்தனைகளை கேள்வி கேட்ட
ஆசிரியர் சங்கரையும் பாராட்டினார்.
முன்னதாக, தமிழக பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த
புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை சமூகவலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ள முதல்வர் “அறிவியல் வழியே
முன்னேற்றத்துக்கான வழி. தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக
மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட
வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
0 Comments