'Red Alert" என்றால் என்ன? - வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண
அலெர்ட்கள் குறித்த விளக்கம் - முழு விவரம்
தமிழகத்தில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த நேரத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கைதான் ரெட்
அலெர்ட் என்று அழைக்கப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அனைத்து விதமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது
வானிலை ஆய்வு மையம் விடுக்கும் வண்ண அலெர்ட்கள் எவற்றை உணர்த்துகின்றன.. விளக்கம்
என்ன?
புயல் மற்றும் மழைக்காலங்களில் ரெட் அலெர்ட், எல்லோ அலெர்ட் என்பது போன்ற
வார்த்தைகளை அடிக்கடி நாம் கேட்கிறோம். காலநிலை குறித்து மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கைகளை
விடுக்கிறது.
இதில் கிரீன் அலெர்ட் அதாவது பச்சை எச்சரிக்கை என்பது மழை பெய்யும் அறிகுறி
தென்பட்டாலே வெளியிடப்படும். பச்சையெனில் லேசானது முதல் மிதமான அளவு அதாவது15.6
மில்லி மீட்டர் முதல் 64.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்கிறது
வானிலை ஆய்வு மையம்.
இதற்கு அடுத்த இடத்தில் யெல்லோ அலெர்ட் எனப்படும் மஞ்சள் எச்சரிக்கை இருக்கிறது.
வானிலை மோசமாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் விதமாக இந்த எச்சரிக்கை
விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கையின் போது 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5
மில்லி மீட்டர் வரை மழைபெய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை
விடுக்கப்படும் போது மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில்
வைத்துக் கொள்வது நல்லது. தமிழகத்துக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கையே
விடுக்கப்பட்டுள்ளது.
பொருட்சேதம் அல்லது உயிர்சேதம் ஏற்படும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் போது
வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அல்லது ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கிறது. இதுபோன்ற
சமயங்களில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் அளவிற்கு கனமழை
பெய்யும்.
ரெட் அலர்ட் என்னும் சிவப்பு எச்சரிக்கை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்
அளவிலும், போக்குவரத்து, மின்சாரம், இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கும்
வகையிலும் மிக கனமழை பெய்யும்போது விடுக்கப்படுகிறது. ரெட் அலர்ட்டின்போது 204.5
மில்லி மீட்டருக்கு மேல் மிக கனமழை பெய்யக் கூடும்.
வானிலை மையத்தால் விடுக்கப்படும் எச்சரிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்களும், அரசு
தரப்பும் தயாராக வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வண்ணங்களின் அடிப்படையில்
எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
0 Comments