கற்பித்தலை தவிர மற்ற பணிகளில் தான் நேரம்
கரைகிறது என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத மற்ற
பணிகள் என்று நூற்றுக்கும் அதிகமான திட்டங்களை பட்டியலிட்டு, இதில் எங்கே
மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் இருக்கிறது என்ற கேள்வியோடு இணையவாசிகள் அதிகமாக
பகிர்ந்து வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான
நேரம் மிக மிக சொற்பமே என்றும், அதை தவிர்த்து பல்வேறு கணக்கெடுப்புப் பணிகள்,
ஆய்வு பணிகள், திருவிழாக்கள், கலை விழாக்கள் என்று தான் பெரும்பாலான நேரம்
கரைகிறது என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டார்களா
இல்லையா, அவர்களுக்கான விலையில்லாத திட்டங்கள் வழங்கப்பட்டதா இல்லையா, மாணவர்கள்
எந்த நேரத்திற்கு பள்ளிக்கு வருகிறார்கள், என பல்வேறு புள்ளி விவரங்கள் குறித்த
பதிவுகளையும் கணினியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளனர்.
கல்வித்துறையில் ஏற்கனவே 'எமிஸ்' இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நுாற்றுக்கும் மேற்பட்ட தகவல் விபரம் பதிவேற்றங்களால் ஆசிரியர்கள் கடும் எரிச்சலில் உள்ளனர். இந்நிலையில் 'யுடைஸ் பிளஸ்' (யுனிபைர்டு டிஸ்ட்ரிக்ட் இன்பர்மேஷன் பார் எஜூகேஷன்) என்ற செயலியில் மாணவர்கள் விபரம் குறித்த 50க்கும் மேற்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கல்வித்துறைக்காக தனியாரால் செயல்படுத்தப்படும் 'எமிஸ்' இணையதளத்தில் மாணவர், ஆசிரியர், அரசு நலத்திட்டங்கள் என டேட்டா மற்றும் போட்டோவுடன் தினம் நுாற்றுக்கணக்கான பதிவேற்றங்களால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் காவு வாங்கப்பட்டு வருகிறது. 'எமிஸ் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்' என துறை அமைச்சர் மகேஷ் பலமுறை உறுதியளித்தும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. இதனால் ஆசிரியர்கள் மனஉளைச்சலுடன் உள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு செயலி எனக்கூறி 'UDISE+'ல் ஒன்று முதல் பிளஸ் 2 வரையான மாணவர்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே எமிஸ் பணியால் பாதிக்கப்பட்ட கற்பித்தல் பணி, தற்போது அதன் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: இது இரண்டாவது எமிஸ் பணி போல் உள்ளது. 'யுடைஸ் பிளஸ்' கேட்கப்படும் அனைத்து விபரங்களும் எமிஸில் உள்ளன. ஆனாலும் மீண்டும் அதை பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவர்களின் ஜெனரல் புரபைல், பெர்மனன்ட் என்ரோல் நம்பர் (பென்) உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பாக மாணவர் ஆதார் எண், பிறந்த தேதிக்கான சான்றிதழ் பதிவேற்றம் பெரும் சவாலாக உள்ளது. இப்பணியை தவிர பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியவில்லை. இப்பிரச்னைக்கு கல்வித்துறை முடிவு கட்டவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்றனர்.
0 Comments