பருவநிலை மாற்ற மாநாடு; மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி: முதல்
பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு
தமிழக அரசு நடத்தவுள்ள பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று
வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருவநிலை மாற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை
மாற்றத் துறை சார்பில் பருவநிலை மாற்றம் மாநாடு 3.0 வரும் பிப்ரவரியில் நடைபெற
உள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில்
இந்த மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளி,
கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கலாம். பருவநிலை மாற்ற பிரச்சினைக்கு
தீர்வு காண்பதில் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பங்கேற்கும் வகையில்
இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த இந்த போட்டி ஒரு தளமாக அமையும்.
மாணவர்கள் வடிவமைக்கும் சின்னம், சுற்றுச்சூழல் நீடித்த வளர்ச்சி, புதுமை மற்றும்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்க
வேண்டும். சிறந்த சின்னத்தை வடிவமைப்போருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் பரிசுத்
தொகை வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம்
வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களும் இளைஞர்களும் தங்கள்
படைப்புகளை கியூஆர் கோடு வாயிலாகவோ mascotccm@gmail.com என்ற மின்னஞ்சல்
வாயிலாகவோ ஜனவரி 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதற்கான கியூஆர் கோடு
https://tnclimatechangemission.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை,
1, ஜீனியஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை 600015 (தொலைபேசி எண் 044- 24336421) என்ற
முகவரியில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments