யுஜிசி 2025 வரைவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்ய பொது
மக்களுக்கு அழைப்பு

மத்திய பாஜக அரசின் யுஜிசி 2025 வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புகள்,
கருத்துகள் மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்திடுமாறு பெற்றோர்கள், மாணவர்கள்,
கல்வியாளர்களுக்கு திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அழைப்பு
விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு கல்வித்துறையில்
யுஜிசி அமைப்பை வைத்துக் கொண்டு மேற்கொள்ளும் அதிகார அத்துமீறல் போக்குகளை
தடுத்து நிறுத்த திமுக-வின் நீண்ட கால கோரிக்கையான கல்வியை ஒத்திசைவுப்
பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே ஒரே தீர்வாக இருக்க
முடியும். இது வெறும் கல்வி தொடர்புடையது அல்ல.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எப்படி எந்த விவாதமும் இல்லாமல் ஒன்றிய பிரதேசம் (Union
Territory) ஆக்கப்பட்டதோ, அதைவிட மோசமாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும்
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிர்வாக அலகுகளாக மாற்றும்
மிகப்பெரிய சட்ட நடவடிக்கை என்பதை நாம் உணர வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் சட்டம் இயற்றும் உரிமைப் பெற்ற மாநில
சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றப்பட்டு அமைக்கப்படும் பல்கலைக்கழகங்களை, எவ்வித
சட்டம் இயற்றுகிற உரிமையும் அற்ற, நெறிமுறைகளை மட்டும் வழங்கக்கூடிய யுஜிசி என்ற
அமைப்பைக் கொண்டு ஒரு மாபெரும் சட்ட விதிமீறலையும், குடியாட்சி தன்மையை
குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து, மாநில உரிமைகளை களவாட நினைக்கும் மத்திய
பாஜக அரசின் சர்வாதிகாரத் தன்மையை மக்கள் நாம் உணர வேண்டும்.
எனவே, திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள், மாவட்டத்தில் உள்ள
கல்லூரிகளின் முன்பாக இதுதொடர்பாக சுவரொட்டிகளை ஒட்டி, தமிழ் மாணவர் மன்றம்
மூலமாக கல்லூரி மாணவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு, கல்வி உரிமை, மாநில உரிமை,
கூட்டாட்சி தத்துவம், சமூகநீதி, சமவாய்ப்பு, அரசியமைப்பு சட்டம் ஆகியவற்றை
காத்திட, யுஜிசி வெளியிட்டுள்ள 2025 வரைவு நெறிமுறைகள் அறிக்கையை திரும்பப் பெற
வலியுறுத்துங்கள்.
அதற்காக, வரும் பிப்.5-ம் தேதிக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,
பொதுமக்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், கட்சியினர், தமிழ் மாணவர் மன்ற
நிர்வாகிகள், திமுக மாணவர் அணியினர் அனைவரும் பல்கலைக்கழக நிதிநல்லைக் குழுவின்
இந்த வரைவு நெறிமுறைகளை எதிரித்து, நமது மாநில அரசின் கல்வி உரிமையை பாதுகாக்க
யுஜிசி 2025 வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான உங்கள் எதிர்ப்புகள், கருத்துகள்,
கண்டனங்களை draftregulations@ugc.gov.in என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 Comments