பொங்கல் விழாவால் தள்ளிவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஜன. 21, 27-ல்
நடைபெறும்
பொங்கல் விழாவால் தள்ளிவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஜனவரி 21 மற்றும் 27-ம்
தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்
தேர்வு மற்றும் பிஎச்டி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜனவரி 3 முதல் 16ம் தேதி
வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது.
தமிழகத்தில் ஜனவரி 15 மற்றும் 16ம் தேதி பொங்கல் பண்டிகை நாட்களாக இருப்பதால்
அன்றைய தினங்களில் நடைபெறும் நெட் தேர்வை மாற்றியமைக்க வேண்டும் என்று அரசியல்
கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக
தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனவரி 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த நெட் தேர்வு
தள்ளிவைக்கப்படும் என்றும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்
என்டிஏ தெரிவித்தது. இந்நிலையில், புதிய தேர்வு தேதியை என்டிஏ நேற்று அறிவித்தது.
அதன்படி, ஜனவரி 15ம் தேதி நடைபெற இருந்த நெட் தேர்வு ஜனவரி 21 மற்றும் 27ம் தேதி
ஒரே ஷிப்டில் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை என்டிஏ இணையதளத்தில்
அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கருத்து: நெட் தேர்வு தேதி மாற்றப்பட்டது தொடர்பாக முதல்வர்
ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பொங்கல் பண்டிகைக்
காலத்தில் நடைபெறவிருந்த யுஜிசி தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்ற வேண்டும் என
மத்திய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அத்தேர்வு
ஒத்திவைக்கப்பட்டது சரியான முடிவு. தமிழ் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கிய
தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப்
பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியேனும் நாட்டில்
செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் இங்கு வாழும்
அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என
நம்புவோம்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
0 Comments