சைனிக் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி:
பிப்ரவரியில் நுழைவு தேர்வு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6UJyQfPpkRyRe2Ds9MgCZkDHRdDC1vm4CffVKPM7mbnS0e1cLnMiNYq_6sWwk7bw2aVYgH5dJ8GB83dz1IXy6oavC4SwI9XghtXgtb4r1tMrRKCo-tduIMlDLyLBI8Xia2Mp_rMfqsW14He2UbZCOPBJgyw7a0O0KZ_vRSRKyw06l4SBCzieVVT5Tbkw/s320/depositphotos_209860902-stock-illustration-vector-illustration-concept-business-meeting.jpg)
மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத்
தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று முடிவடைகிறது.
ராணுவப் பணியில் சேர, மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட சைனிக்
பள்ளிகள், நாடு முழுவதும் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை
அமராவதி நகரில் சைனிக் பள்ளி உள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் இப்பள்ளிகள்
செயல்படுகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில்
6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு பிப்ரவரியில் நடைபெற
உள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இத்தேர்வை நடத்துகிறது. தேர்வுக்கான இணையதள
விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாணவர்கள்
ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று நிறைவடைகிறது.
விருப்பம் உள்ளவர்கள் https://exams.nta.ac.in/AISSEE என்ற இணையதளம் மூலம்
துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு
ரூ.650, இதர பிரிவினருக்கு ரூ.800. கட்டணத்தை இணையவழியில் நாளைக்குள் (ஜனவரி 14)
செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல்
விவரங்களை என்டிஏ இணையதளத்தில் (www.nta.ac.in) அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள்
இருந்தால், 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது aissee@nta.ac.in எனும்
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
![](https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/01/13/xlarge/1346820.jpg)
0 Comments