மத்திய பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!
பங்குச் சந்தைகள்
2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை
பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.
இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் சனிக்கிழமை விடுமுறை
என்றாலும், பட்ஜெட் தாக்கல் செய்வதால் வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள்
இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சிறப்பு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு
தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
சீதாராமன் 2019 ஆம் ஆண்டு, தனது முதல் பட்ஜெட்டில், பட்ஜெட் ஆவணங்களை எடுத்துச்
செல்ல பல ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருந்த தோல் பிரீஃப்கேஸை மாற்றினார்
சிவப்புத் துணியால் தயாரிக்கப்பட்ட மிக அழகிய கைப்பையில் பாரம்பரிய கணக்குப்
புத்தகங்களை எடுத்துச் செல்லத் தொடங்கினார். அந்த நடைமுறையையே இதுநாள் வரை
பின்பற்றி வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பட்ஜெட் காகிதமற்ற, டிஜிட்டல் வடிவ
பட்ஜெட் ஆகவே இருக்கிறது.
11:05 am, 01 பிப்ரவரி 2025
பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்
அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்
நிர்மலா சீதாராமன்
11:11 am, 01 பிப்ரவரி 2025
வெளிநடப்பு
பட்ஜெட் உரையை வாசிக்கும் நிலையில், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள்
வெளிநடப்பு செய்யவில்லை.
11:13 am, 01 பிப்ரவரி 2025
ஆறு முக்கியம்சங்கள்
வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய
அம்சங்களுக்கு முக்கியத்துவம்
பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு
வரப்படும்.
தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்
உரையாற்றினார்.
உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளது என்றும், உலகில் வேகமாக
வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாகவும் நிர்மலா சீதாராமன்
பெருமிதம்.
11:17 am, 01 பிப்ரவரி 2025
விவசாயத் துறைக்கான அறிவிப்பு
பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயித்து அரசு செயல்படுகிறது.
பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டம் கொண்டு
வரப்படும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்க திட்டம்.
உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம் அறிமுகம்.
சிறப்பான சாகுபடிக்கு ஏற்ற விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம்.
பருப்பு உற்பத்தியில் 6 ஆண்டுகளில் தன்னிறைவு அடைய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
பிகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம் அறிவிப்பு
11:18 am, 01 பிப்ரவரி 2025
விவசாயத் துறைக்கான அறிவிப்புகளைக் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேசையைத் தட்டி
வரவேற்பு தெரிவித்தார்.
11:25 am, 01 பிப்ரவரி 2025
விவசாயிகளுக்கும் சிறு நிறுவனங்களுக்கும் கடன்
கிசான் கிரெடிட் கார்டு மூலம் 7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் பெற
நடவடிக்கை
கிசான் கடன் அட்டை மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் வசதி
கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள்
சிறு குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் அளவுக்கு வசதிகள்
உருவாக்கப்படும்.
சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
தபால் நிலையங்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
11:33 am, 01 பிப்ரவரி 2025
மருத்துவப் படிப்பு - கூடுதல் இடங்கள்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள்
உருவாக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள்
உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம்
பிராட்பேண்ட் வசதி.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம்
உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்
முதல் முறையாக தொழில்முனைவோராகத் தொடங்கும் பட்டியலின மற்றும் பழங்குடி
பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டம்
அறிமுகம்
11:40 am, 01 பிப்ரவரி 2025
பொம்மை தயாரிப்பு
தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில்
மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்
11:43 am, 01 பிப்ரவரி 2025
குறுகிய கால கடன் தொகை அதிகரிப்பு
விவசாயத்தைத் தொடர்ந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இரண்டாவது
பெரிய வளர்ச்சி இயந்திரமாகும்.
கிசான் கடன் அட்டைகள் மூலம் 7.7 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும்
மீனவர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டித் தொகை திட்டம் மூலமாக வழங்கப்படும்
குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
உலகின் 2 வது மீன் வள உற்பத்தி மையமாக இந்தியா விளங்குகிறது.
உத்யாம் தளத்தில் பதிவு செய்த குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அட்டை மூலம்
சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.
நீண்ட கால மற்றும் குறுகிய கால கடனை உறுதி செய்தல், நீர்ப்பாசன வளர்ச்சி,
பஞ்சாயத்துகள் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை 1.7
கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
11:49 am, 01 பிப்ரவரி 2025
புற்றுநோய் சிகிச்சை மையங்கள்
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி
ஒதுக்கீடு.
கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
11:50 am, 01 பிப்ரவரி 2025
பிகாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு
முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் புதிய விமான நிலையங்கள்
உருவாக்கப்படும்.
ஏற்கெனவே இருக்கும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
பிகார் மாநில உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
11:58 am, 01 பிப்ரவரி 2025
டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு
ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கும் மின்னணு அடையாள அட்டை.
ஒப்பந்த ஊழியர்களை சமூக நல திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை.
டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்.
முதலீடு நாட்டின் 3-வது பெரிய வளர்ச்சி இயந்திரமாகும். மக்களின் மீது முதலீடு
செய்வது புதுமையில் முதலீடு செய்வது ஆகியவை அரசின் நோக்கம்.
விண்வெளித் துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் இயக்கம்
உருவாக்கப்படும்.
பிகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும்.
சுற்றுலா துறையில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
11:59 am, 01 பிப்ரவரி 2025
வருமான வரி மசோதா
வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த
வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 5 சிறிய அணு
உலைகள் 2033-ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74 சதவிகிதத்தில் இருந்து 100 சதவிகிதமாக
அதிகரிப்பு.
சுய உதவிக் குழு மற்றும் கிராமப்புற மக்களின் வங்கி பயன்பாட்டை ஊக்குவிக்க
பொதுத்துறை வங்கி மூலம் சிறப்பு வங்கி பயன்பாட்டு நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
நிதிப்பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 4.8
சதவீதமாக உள்ளது.
12:04 pm, 01 பிப்ரவரி 2025
செல்ஃபோன், மின்சார வாகனங்கள் விலை குறைகிறது
செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை
லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள்
மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12:08 pm, 01 பிப்ரவரி 2025
மறைமுக வரிகளில் சீர்திருத்தங்கள்
மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரி பிடித்தம் கிடையாது.
கப்பல் கட்டுமானத்துக்கான சலுகைகள் மேலும் 10 ஆண்டுகளுக்குத் தொடரும்.
பின்னலாடைகளுக்கு இறக்குமதி சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
12:12 pm, 01 பிப்ரவரி 2025
ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500
கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
100 ஜிகாவாட் அணு ஆற்றல் மையம் 2047ம் ஆண்டுக்குள் நாட்டில் அமைக்கப்படும்.
2033 ஆண்டுக்குள் 5 அணு மின்மாற்றி ரியாக்டர்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்படும்
கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிப்பு.
வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி சலுகை நீட்டிப்பு.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிச் சலுகை
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக தள்ளுபடி
செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 சதவிகிதம் வரியில் சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
12:45 pm, 01 பிப்ரவரி 2025
மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த ஹீல் இந்தியா என்ற புதிய திட்டம்
செயல்படுத்தப்படும்
மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன்
வழங்கப்படும்
2025-26 பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
நிதிப் பற்றாக்குறை
வரும் 2025ஆம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8%
ஆகவும், 2026ஆம் ஆண்டுக்கு 4.4% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் நிகர சந்தைக் கடன்கள் ரூ.11.54 லட்சம் கோடியாக இருக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதியல்லாத அனைத்து துறைகளிலும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்காக உயர்மட்டக்
குழுவை அரசு அமைக்கும்.
மாநிலங்களின் முதலீட்டு நட்புறவு குறியீடு இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது
ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது வருமான வரி சட்டம் எளிதாக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால், வருமான வரி
கிடையாது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மிகப்பெரிய மாற்றம் செய்து
அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாக இருக்கும்.
அதாவது மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில்
இருந்து விலக்குப் பெறுவார்கள்.
இதன் மூலம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு
ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இது ரூ.12 லட்சமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது ரூ.1
லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் கூடுதலாக 75,000 ரூபாய் வரை கழிவு பெறலாம்.
வருமான வரி விகிதங்கள்
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை.
அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் வரி விகிதம் மற்றும் வரிப்
பிடித்தம் மாற்றப்படுகின்றன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவித்துள்ளார்.
மேலும்,
ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம் வரை - வருமான வரி கிடையாது
ரூ. 4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வருமான வரி
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வரி
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 15% வரி
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வரி
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25%
ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30% வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோருக்கு, மூலதன ஆதாயங்கள் போன்ற சிறப்பு வருமானத்தைத் தவிர, அவர்கள்
ஈட்டும் மாத வருவாய்க்கு வரி இல்லாத வகையில் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments