நம்ப வைத்து துரோகம் இழைக்கும் அரசுக்கு CPS ஒழிப்பு இயக்கம்
கண்டனம்

CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்
நம்ப வைத்து துரோகம் இழைக்கும் திமுக அரசுக்கு CPS ஒழிப்பு இயக்கம் கண்டனம்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக..வின் தேர்தல் வாக்குறுதி எண்: 309..ல்
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும்
நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.
செய்வதைச் சொல்வோம் சொன்னதைச் செய்வோம் என்று வார்த்தை ஜாலம் பேசி ஆட்சிக்கு வந்த
திமுக அரசு, தான் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை
அமுல்படுத்துவதற்கு மாறாக..
பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் மற்றும்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக
விரிவாக ஆராய்ந்திட 3 பேர் கொண்ட அலுவலர் குழு அமைத்து திமுக அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
மேலும், மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக்
கோரிக்கையினையும் கருத்தில் கொண்டு நடைமுறைபடுத்த தக்க வகையில், உரிய ஓய்வூதிய
முறை குறித்து பரிந்துரைகளை அக்குழு அரசிற்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஒன்பது மாதத்திற்குள்
அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் திமுக அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு குழு அமைப்பது என்பதே அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை
நிறுவன ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்ல.,
குழு அமைப்பது என்பதே காலம் தாழ்த்தும் நடவடிக்கை என்பது கடந்த கால அனுபவம்
ஆகும்.
2016 ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக செல்வி.ஜெ.
ஜெயலலிதா அரசு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் தலைமையில் வல்லுநர் குழு அமைத்தது.
மூன்று மாதத்தில் குழுவின் அறிக்கையை பெற்று புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து
செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அறிவித்தார்கள்.
3 மாதங்களில் அறிக்கை வழங்காமல், 3 ஆண்டுகள் கழித்து தான் வல்லுநர் குழு, தன்
அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது.
வல்லுநர் குழு அறிக்கை, தமிழக அரசுக்கு சமர்பிக்கப்பட்டு
6 ஆண்டுகள் முடிந்த பின்பும் இன்று வரை வல்லுநர் குழு அறிக்கை மீது மாண்புமிகு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன்,
அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவும் இல்லை.
பொதுவாக இது போன்ற குழு அமைக்கும் போது அதிகபட்சம் 3 மாத காலத்தில் அறிக்கை
சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.
ஆனால், இக்குழுவுக்கு அறிக்கை சமர்பிக்க ஒன்பது மாதங்கள் அதாவது, அக்டோபர் 2025
வரை தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல் *அலுவலர் குழு அமைப்பது என்பது காலம்
கடத்துவதற்கான தந்திரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.*
வல்லுநர் குழு போன்று அலுவலர் குழுவும்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்பிக்காது.
2026 சட்டமன்ற தேர்தலில், அலுவலர் குழுவின் அறிக்கையை பெற்று CPS.. ஐ ரத்து
செய்வோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
மற்றும்
பொதுத் துறை நிறுவன ஊழியர்களை ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவில் இருக்கிறார்கள்.
குழு அமைத்து தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பித்து விடலாம் என்று
திமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இப்போக்கை CPS ஒழிப்பு இயக்கம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், திமுக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தாமல் ஏமாற்றும்
நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற அனுபவத்தின் அடிப்படையில் தேர்தல் கால
வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக் கோரி
மே மாதம் குமரி முதல் சென்னை வரை இரு சக்கர வாகனப் பிரச்சாரம்,
சென்னையில் 72 மணி நேரம் உண்ணாவிரதம்,
செப்டம்பர் மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், மாவட்ட மறியல், ஒரு நாள்
வேலை நிறுத்தம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் நடந்த
திட்டமிட்டுள்ளோம்.
புதிய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தியுள்ள தமிழகம் தவிர்த்து, இதர மாநிலங்களில்
ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர் குடும்பங்களுக்கு பணிக் கொடை சட்டப்படி
பணிக் கொடையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், 22 ஆண்டுகளாக தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெறும் அரசு
ஊழியர், ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடை வழங்கப்படாத அவல நிலையை
சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுக அரசு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை கைவிட்டு
2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 ன்படி புதிய ஓய்வூதியத் திட்டம்
கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன்,
பணிக் கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம்.
மு.செல்வக்குமார்
சு.ஜெயராஜராஜேஸ்வரன்
பி.பிரடெரிக் ஏங்கல்ஸ்
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
0 Comments