SSA திட்ட நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

      SSA திட்ட நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
எஸ்எஸ்ஏ திட்டத்தின் நிதியை மத்திய அரசு தராவிட்டால் பெற்றோர்களை ஒருங்கிணைத்து போராடுவோம் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் கையெழுத்திடாததால் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதி ரூ.2,152 கோடி இதுவரை வழங்கப்படாமல் இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்துக்கு இந்த ஆண்டுக்குரிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்(எஸ்எஸ்ஏ) நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பகுதிநேர பயிற்றுநர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை பின்பற்றி பல்வேறு துறைகளில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள். இருமொழிக் கொள்கையே பின்பற்றி அனைத்து துறைகளிலும் சிறப்பாகவும், பொருளாதாரத்தில் 2-வது மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

எனவே, நிதி விடுவிக்க மத்திய அரசு தொடர்ந்து தாமதம் செய்தால் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களையும் இணைத்து போராட வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை மத்திய அரசு பகிர்ந்தளிப்பதில் பாகுபாடு காட்டாமல் நிபந்தனை இன்றி அவற்றை விரைவில் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments