ஆளுமைகளை உருவாக்கும் அரசுப் பள்ளிகள்

ஆளுமைகளை உருவாக்கும் அரசுப் பள்ளிகள்!!!
புதுவை பாகூர் ஒட்டி இருக்கும் கடலூர் மாவட்டம் இராண்டாயிரவிளாகம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் இவர்கள் .

நூற்றுக்கு உட்பட்ட குடும்பங்களே வசிக்கும் மிக சிறிய கிராமம் .

பள்ளியோ, வேலையோ, கேளிக்கையோ மாலை 6 மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடும் .

இரவு எந்த அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கிழக்கே பாகூர் அல்லது மேற்கே கரையம்புத்தூர் பிரதான சாலைக்கே பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும் .

அப்படி சூழல் ஏற்பட்டாலும் ஆங்காங்கே தெருவிளக்கு இல்லாத வயத்தோப்பு சாலை வழியே ஊரின் பிரதான சாலைக்கு இரவு வந்துப் போவது அவ்வளவு எளிதான காரியமல்ல .

வசதியில் பின்தங்கிய கிராமம் ஆனால் உழைப்பிலும் ஒற்றுமையிலும் முன்னோக்கி நகரும் கிராமம் .

இங்கே எவரையும் வேலையில்லாமல் சும்மாவாக அமர்ந்திருப்பதை காண்பது அரிது, அண்டை வீட்டார் அம்மாக்கள் ஒருவருக்கொருவர் அன்று அவரவர் சமைத்த குழம்பை கிண்ணங்களில் பறிமாறிக் கொள்வர், பாட்டிகள் விறகு ஒடிப்பர், தாத்தாக்கள் ஆடு மாடுகள் மேய்ப்பர், அப்பாக்கள் விவசாயம் அல்லது கைத்தொழில் செய்வர், இளைஞர் வேலைக்கு செல்வர், அல்லது காலை கல்லூரி மாலை கைப்பந்து, கபடி ஆடுவர், சிறுவர்கள் காலை பள்ளி மாலை ஐஸ் பாய், சில்லு, ஆபியம், ஓடி பிடித்தல் என ஆண் பெண் பேதமில்லாமல் கூடி ஆடுவர்.

எவர் கையிலும் தொடுதிரைகளை காண்பது பேரரிது.

இங்குள்ள பிள்ளைகள் எவரும் அடுத்த ஊருக்கு சென்று தனியார் பள்ளிக்கு சென்று விஷேசமாக பயில்வதில்லை, இந்த கிராமத்திலே தொடக்க பள்ளி உள்ளது.

இக்கிராமத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாட ஏட்டில் மட்டுமல்ல வாழ்க்கை ஏட்டிலும் படும் கெட்டி.

லட்சங்களை கொட்டி லட்சங்களை மாதம் சம்பளமாக வருங்காலங்களில் சம்பாதிக்க படிக்கும் தனியார் உயர்தர பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் தனித்து இயங்குவதிலும், சுயமாய் சிந்திப்பதிலும், தைரியமாய் பேசுவதிலும், திறன்பட செயல்படுவதிலும் போட்டி வைத்தால்

தனியார் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் பூஜியமே.

வீட்டிலிருந்து பள்ளி தூரம் என்றாலும் எந்த பிள்ளையையும் பெற்றோர்கள் கைப்பிடித்து கொண்டு சென்று பள்ளிக்கு விடுவதில்லை, தானே எழுந்திருத்து தானே குளித்து, தானே உண்டு, தானே தனியே பள்ளி செல்லும் பிள்ளைகள் தான் இந்த கிராமத்தில் ஏராளம் .

இந்த அரசு பள்ளியில் நான்காவது படிக்கும் ஒரு பெண் பிள்ளை தானே சுயேட்சையாக சாலையை கடந்து வீட்டிற்கு செல்லும், இதுவே தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு இது சாத்தியமா என்றால் கேள்விக்குறி பெற்றோர் தயவு இல்லாமல் அவைகள் இயங்குவது பெறும் கடினம் .

யார் கண்டார்கள் இங்கே புகைப்படத்தில் நடந்து வந்துக் கொண்டிருக்கும் மூன்று அரசு பள்ளி மாணவிகளும் நாளை நமது நாட்டை ஆள வாய்ப்பிருக்கிறது, காரணம் சிறு வயதிலேயே தங்களது குடும்ப வாழ்வியலையும், குடும்ப பொருளாதாரத்தையும், குடும்ப நிர்வாகத்தையும் நன்கு கற்று தேர்ந்தவர்கள், எந்நிலையில் வாழ்கையில் வீழ்ந்தாலும் கை ஊணி எழுந்து தைரியமாய் ஓடக் கூடிய ஆற்றல்சாலிகள்.

வாழ வேண்டுமா தனியார் பள்ளியில் சேருங்கள், ஆள வேண்டுமா அரசு பள்ளியில் சேருங்கள்.

நன்றி Pondicherry Villages

1000118377

Post a Comment

0 Comments