பத்தாம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வு எளிது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பத்தாம் வகுப்பு தமிழ் பாடத் தேர்வு எளிது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி
பத்தாம் வகுப்புக்கான தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். மேலும், தேர்வெழுத வந்த மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர தமிழ் பாடத்தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளில் 1, 2, 3 , 5 மதிப்பெண் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் எதிர்பார்த்த வினாக்களே கேட்கப்பட்டன. இத்தேர்வில் மெல்ல கற்கும் மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற முடியும்.

இதனால் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளது என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கிலப் பாடத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 முதல் 5-ம் வகுப்பு தேர்வு மாற்றமா? - இதற்கிடையே சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த மாணவர்களிடம் பதற்றமின்றி மன உறுதியோடு தேர்வை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, மாணவர்கள் தேர்வை சிறந்த முறையில் எழுத வேண்டும். கோடை வெயில் அதிகரித்து வரும் சூழலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’என்றார்.

முதல்வர் வாழ்த்து: இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பேசும்போது, ‘‘பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். பயமும், பதற்றமுமின்றி தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கான மேற்படிப்புகளுக்குச் செல்லுங்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments